இலங்கையின் இளைஞர்கள் முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கு முட்டுக்கட்டை; புதிய சட்டம்!

auto

ஸ்ரீலங்காவில் இனிமேல் முப்பத்தைந்து வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான சட்டமூலம் தற்போது உருவாக்கப்பட்டுவருவதாக ஸ்ரீலங்காவின் வீதி பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டியைப் பயன்படுத்தி நிகழும் சட்டவிரோத செயல்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் அதிகரித்த விபத்துக்கள் ஆகியவற்றோடு இளைஞர்களே அதிகம் சம்மந்தப்படுவதாக அண்மையில் பல குற்றச்சாட்டுக்கள் நிலவி வந்தன.

இதனைக் கருத்திற்கொண்டு முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்புக்களினாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இளைஞர்கள் அதிகமாக முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு வருவதனை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கொடகொட தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் பொதுமக்களால் பெரும்பாலும் முச்சக்கரவண்டியே பயணத்துக்கென பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது எட்டு லட்சத்துக்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் பாவனையில் உள்ளமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.