வாவெட்டி ஈஸ்வர ஆலயத்தில் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரன் ஆலயத்துடன் தொடர்புடைய வாவெட்டி மலையில் அமைந்துள்ள வாவெட்டி ஈஸ்வர ஆலயத்தில் இன்று மக்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் போரால் இந்த ஆலயத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு வனவளப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸார் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினருடன் கலந்துரையாடி ஒட்டுசுட்டான் ஆலய பரிபாலன சபையினர் மக்களுடன் இணைந்து வழிபாடுகளை நடத்தினர்.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா அன்று ஆலயத்திலிருந்து வாவெட்டிமலை சிவன் ஆலயத்துக்குச் சென்று அங்கு விசேட பூசைகள் நடைபெற்று வேட்டையாடி ஆலயம் திரும்புவது வழமையாகும். போரால் இது தடைப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக உயர்ந்த மலையாக இது காணப்படுகின்றது. இந்த மலையில் சுமார் 1800ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வன்னியை ஆட்சி செய்த மன்னர்களால் ஆலயம் உருவாக்கப்பட்டு வழிபட்டு வந்தமைக்கான சான்றுகள் இன்றும் அங்கு காணப்படுகின்றன.
மலையின் உச்சியில் ஆலயம் இருந்தமைக்கான கற் தூண்கள் மலையின் உச்சியில் கொடி நாட்டப்பட்டமைக்கான கொடிப்பீடம் ஆகியன இன்றும் காணப்படுகின்றது. நீண்ட நாட்களில் பின் கடவுளைக் கண்ட உணர்வு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.








