இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாளியை சேர்ந்த சமூகத்தினர், இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு குடிமகன் என்ற உரிமையை பெறுவதற்காக இஸ்ரேல் ராணுவத்தில் கட்டாய ராணுவ சேவை புரிந்து வருவதாக டெல் அவிவ்வில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல் அவிவ்வில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியர்கள் முன்பு பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூட்டாக பேசினர். இதில் மோடி பேசும் போது, மக்களுக்கிடையேயான சகோதரத்தை ஊக்குவிக்கும் வகையில், மும்பை, டெல்லி – டெல் அவிவ் இடையே விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்றார்.

இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பலநாள் கோரிக்கையான, இந்திய கலாச்சார அமைப்பு இஸ்ரேலில் நிறுவப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு குடிமகன் என்ற உரிமையை பெறுவதற்குள் இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதனை எளிமையாக்க வேண்டிய நடவடிக்கையை விரைந்து எடுப்பேன் என்றும், இஸ்ரேல் ராணுவத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளிகளுக்கு அனைவருக்கும் இந்திய குடிமகன் உரிமை விரைவில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளில் இந்திய பிரதமர்கள் யாரும் இஸ்ரேலுக்கு பயணம் செய்யவில்லை. உங்களது ஆசீர்வாதங்களை பெறவே இஸ்ரேல் வந்துள்ளேன் என்று மோடி கூற, “மோடி, மோடி” என மக்கள் கரகோசங்களை எழுப்பினர்.







