புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சகல நடவடிக்கைகளும் இறுதிக்கட் டத்தில்

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சகல நடவடிக்கைகளும் இறுதிக்கட் டத்தில் உள்ளன. பிரதான கட்சிகள் மத்தியில் உள்ளக கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் அரசியல் அமைப்பின் இறுதி திட்ட வரைவு கொண்டுவரப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

நல்லிணக்கத்தை உருவாக்குவது கடினமான ஒரு காரியம் அல்ல. ஆனால் அதை உருவாக்குவது அரசியல் தலைமைகளின் கைகளில் மாத்திரமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம், பண்டாரநாயக்க வெளிநாட்டு கற்கைகளுக்கான நிலையம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சமாதானத்தை கட்டியெழுப்பும் மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்துள்ளன. நாட்டின் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற பாதையில் நாம் தொடர்ந்தும் பயணிக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. இப்போது ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றமானது மிகவும் அவசியமான மாற்றமாகும். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு மாற்றமும் இடம்பெறாது நல்லிணக்கத்துக்கான பாதை மூடப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றம் மூலம் இன முரண்பாடுகளில் இருந்து விடுபடும் நோக்கம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கான அரசியல் தலைமைத்துவம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆட்சி மாற்றத்தின் மூலமாக நாட்டின் பாதையை மாற்றவே பிரதான இரண்டு கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளன. பொது உடன்படிக்கை ஒன்றின் மூலமாக இந்த பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பயணத்தில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளும், சிவில் அமைப்புகளும் இணைந்து அரசாங்கத்தின் பயணத்தில் அங்கம் வகித்து வருகின்றன. இந்த பயணத்தில் பல்வேறு அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. இதில் எதனை முதலில் மேற்கொள்வது என்ற கேள்வி உள்ளது. இப்போதிருக்கும் நிலைமையில் அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகும். அரசியலமைப்பின் மூலமாக மக்களின் உரிமைகள், சுதந்திரம், அரசியல் நகர்வுகள் அதிகாரங்கள் என்ற அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும்.

இந்த நாடு பெளத்த மத பிணைப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடாகும். எமது கலாசாரம் அரசியல் அனைத்தும் பெளத்த சிங்கள தன்மையில் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே எந்த சந்தர்ப்பத்திலும் புதிய அரசியல் அமைப்பு பெளத்த சிங்கள தன்மைக்கு அப்பால் சென்று உருவாக்கப்படப்போவதில்லை.

ஏனைய மதங்களும் தமது உரிமைகளை பாதுகாத்து சுதந்திரமாக செயற்பட அனுமதியும் வழங்கப்பட வேண்டும். இன்றும் சிறுபான்மை மக்கள் மீதான அழுத்தங்கள் மற்றும் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. ஒரு காலத்தில் யுத்தம் முடிவுக்கு வரும் வரையில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை காணப்பட்டது. ஆனால் அது இன்று முடிவுக்கு வந்துள்ள போதிலும் முஸ்லிம் மக்கள் மீதான அடக்குமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் இருந்து முஸ்லிம் மக்கள் இலக்குவைக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை மற்றும் முஸ்லிம் இனத்தவர் மீதான இலக்கு வைக்கப்பட்ட அடைக்குறை நடவடிக்கைகள் என்பன சுட்டிக்காட்டத்தக்கன. அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்.

ஆகவே புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் நாம் அனைவரும் செயற்பட்டு வருகின்றோம். பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சபையின் மூலமாகவும் அதேபோல் மக்களின் கருத்துக்களை வினவியும் சிவில் சமூகங்களின் ஒத்துழைப்புகளை பெற்றும் மிகவும் தகுதியானதும் தரமானதுமான அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நடவடிக்கைகளில் சகலரதும் பங்களிப்பை உள்வாங்கி செயற்படுவதே பிரதான விடயமாகும். இப்போது புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் சகல நடவடிக்கைகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பிரதான கட்சிகள் மத்தியில் உள்ளக கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. விரைவில் அரசியல் அமைப்பின் இறுதி திட்ட வரைபை கொண்டுவர முடியும்.

மேலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் உரிய பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்ட வேண்டும். அதேபோல் மொழி பிரச்சினையும் பிரதான பிரச்சினையாக உள்ளது. ஆகவே சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை சம மொழியாக கொண்டுவரவும் அரச காரியாலயங்கள் மற்றும் அரச செயற்பாடுகளில் இரண்டு மொழிகளையும் முன்னெடுக்கவும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

நல்லிணக்க செயலணியின் கடந்த ஒன்றரை ஆண்டுகால விழிப்புணர்வு செயலமர்வுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே நல்லிணக்கத்தை உருவாக்குவது என்பது கடினமான ஒரு காரியம் அல்ல. ஆனால் அதை உருவாக்குவது அரசியல் தலைமைகளின் கைகளில் மாத்திரமே உள்ளது என்றார்.