வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா: வெஸ்ட் இண்டீசுடன் 3-வது ஆட்டம் இன்று நடக்கிறது

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவா நார்த் சவுன்டில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணியில் பின்வரிசையில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் டாப்-3 வீரர்களான தவான், ரஹானே, கேப்டன் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார்கள். 2-வது ஆட்டத்தில் ரஹானே சதம் விளாசினார். பவுலிங்கிலும் இந்தியா வலுவாக உள்ளது. முந்தைய ஆட்டத்தில் ‘சைனாமேன்’ வகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். எல்லா வகையிலும் பலம் வாய்ந்த அணியாக திகழும் இந்திய அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் உள்ளது.

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் ஹோப், சுனில் அம்ப்ரிஸ் ஆகிய இரு புதுமுக பேட்ஸ்மேன்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 2-ம் தர அணியை போன்றே வெஸ்ட் இண்டீஸ் காணப்படுகிறது. ஆனால் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்க முடிந்தவரை கடுமையாக முயற்சிப்பார்கள். அதனால் இந்திய வீரர்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

இந்த மைதானத்தில் இந்திய அணி 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை இங்கு 11 ஆட்டங்களில் பங்கேற்று 9-ல் தோல்வியை தழுவி இருக்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரஹானே, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ்: எவின் லீவிஸ், கைல் ஹோப், ஷாய் ஹோப், ஜாசன் முகமது, ரோஸ்டன் சேஸ், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ரோவ்மன் பவெல் அல்லது சுனில் அம்ப்ரிஸ், ஆஷ்லே நர்ஸ், தேவேந்திர பிஷூ, அல்ஜாரி ஜோசப், மிக்யூல் கம்மின்ஸ்.

மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென்3, சோனி சிக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.