ஆனைமுகனை அருகம்புல்லால் அர்ச்சிக்க வேண்டும் என்பது ஏன்?

எமனுடைய மகன் அனலன்; பெயருக்கு ஏற்றபடி இவன் அடுத்தவர் உடம்பில் அவருக்கு தெரியாமல் புகுந்து, அவர்களை உருக்கி, சத்தை உண்பது தான் இவன் வேலை. மண்ணுலகில் இருப்பவர்களையெல்லாம் இவ்வாறு உருக்குலைத்த அனலன், அதன்பின், தேவலோகத்தில் புகுந்தான். அவனின் குணம் அறிந்த தேவர்கள் பயந்து, ‘ஆனைமுக வள்ளலே… அனலனிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்…’ என வேண்டினர்.

‘விக்னம் நீக்கும் விநாயகர் அங்கே தோன்றி, துதிக்கையால் அனலனை சுருட்டி விழுங்கினார். ஆனால், அடுத்த வினாடி அனைவரின் வயிரும் எரிந்தது; தாங்க முடியாமல் தடுமாறினர். விநாயகரின் திருமேனி குளிர்ந்தால் தான், அனைவரின் துயரமும் தீரும் என உணர்ந்த தேவர்கள், சந்திரனின் குளிர்ந்த ஒளிக்கற்றைகள் மற்றும் குளிர்ச்சி மிகுந்த அரவங்களை விநாயகரின் திருமேனியில் சாற்றினர்; பலனேதும் இல்லை.

அப்போது, முனிவர்கள் ஒவ்வொருவரும், 21 அருகம்புல்லை விநாயகரின் திருமேனியில் சாற்றினர். விநாயகரின் வயிறு குளிர்ந்த அதே வினாடியில், அனைவரின் வயிறும் குளிர்ந்தது. அன்று முதல், ஆனைமுகனுக்கு அருகம்புல் சாற்றும் நியதி உண்டானது….’ என்றார். உடலில் சூடு அதிகமாகும் போது, எதிர்விளைவுகள் உண்டாகி, உடல்நிலை பாதிக்கும்.

அப்போது பக்கவிளைவுகள் இல்லாதவாறு உடல் கொதிப்பை ஆற்றுவதோடு, ஆரோக்கியத்தையும் அளிப்பது அருகம்புல். அதனாலே, நம் முன்னோர் அருகம்புல் சாறு அருந்தச் சொன்னார்கள். ஆகவே, ஞானநூல்களின் அடிப்படை உண்மையை உணர்வோம்; ஐங்கரன் அருளால் அல்லல்கள் நீங்கும்!