மந்திரியை குரங்கு என விமர்சனம்: இலங்கை வீரர் மலிங்காவுக்கு தடை?

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கையின் பீல்டிங் மோசமாக இருந்தது. முக்கிய கேட்சுக்களை தவற விட்டனர்.

இதனால் இலங்கை அணி வீரர்கள் உடல் தகுதி குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை விளையாட்டு மந்திரி தயாசீறி ஜெயசேகரா கூறினார்.

அதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, நாற்காலியை அலங்கரிக்கப்பவர்களின் விமர்சனத்தை நான் பொருட்படுத்தவில்லை. இது கிளியின் கூடுபற்றி குரங்கு பேசுவது போல் இருக்கிறது. கிளி கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும் என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து மலிங்காவிடம் விசாரணை நடத்த மந்திரி தயாசீறி ஜெயசேகரா உத்தரவிட்டார். விசாரணை நடத்த இலங்கை வாரிய நிர்வாகி ஆஸ்லேடி சில்வா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு மலிங்காவிடம் இன்று விசாரணை நடத்துகிறது. அதன்பின் அறிக்கையை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கொடுக்கும்.

மலிங்கா மீது கிரிக்கெட் வாரிய ஒப்பந்த விதியை மீறி விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சில போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது.