பெண்கள் உலகக்கோப்பை: முதல் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி

இங்கிலாந்தில் இன்று பெண்களுக்கான உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதின.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் பூனம் ரவுட், மந்தனா தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்திய அணி 26.5 ஓவரில் 144 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது, மந்தனா 72 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து கேப்டன் மிதலி ராஜ் களம் இற்ங்கினார்கள். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பூனம் ரவுத் 134 பந்தில் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மிதலி ராஜ் 73 பந்தில் 71 ரன்கள் எடுத்து 50-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழக்க இந்தியா 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது.

பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய பியோமாண்ட் மற்றும் எஸ்.ஜே. டெய்லர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் களமிறங்கிய எச்.சி. நைட் 85 பந்துகளில் 46 ரன்களும், ஸ்கிவர் 18 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்பின் களமிறங்கிய எஃப்.சி. வில்சன் அதிரடியாக விளையாடி 81 ரன்களை குவித்தார். ஒருபக்கம் இங்கிலாந்து அணி ஸ்கோர் அதிகரித்த போதும் இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை கைப்பற்றினர். இந்தியா சார்பில் டி.பி. ஷர்மா மூன்று விக்கெட்களையும், எஸ் பான்டே இரண்டு விக்கெட்களையும், பூனம் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் சிறப்பான வீரராக 100 பந்துகளில் 90 ரன்களை குவித்த இந்தியாவின் எஸ். மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.