மலேரியா நோயைப் பரப்பும் நுளம்பு இனம் கண்டுபிடிப்பு: கே.அரவிந்தன்

மன்னார் கரையோரப் பகுதிகளில் மலேரியா நோயை பரப்பும் புது வித நுளம்பு இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மலேரியா தடை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி கே.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பேசாலையை அண்மித்த கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் மலேரியா நோயைப் பரப்பும் புது வகை நுளம்பு இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

‘அனோப்பிளிப்ஸ்ற் இவன்சி’ என்ற புது வகை நுளம்பே இவ்வாறு முதல் முதலாக இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நுளம்பு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பரவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றோம்.

அத்துடன், புதுவித நுளம்பானது நகரப்புறங்களில் மலேரியா பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

குறிப்பாக இலங்கையின் முக்கிய நகரங்களை தாக்கி மலேரியாவை பரப்பலாம் என்ற அபாயத்திற்கு இலங்கை உள்ளாகியுள்ளது.

எனவே இது சம்பந்தமான விழிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் மிக வேகமாக ஏற்பட்டு, புதுவித நுளம்பை அழிப்பதற்கான ஒத்துழைப்பு மிக அவசியமானதாக காணப்படுகின்றது.

இந்த நுளம்பானது தற்போது பாழடைந்த கிணறுகளிலும், பாவனைக்கு உட்படுத்தப்படுகின்ற கிணறுகளிலும் அதிகளவான குடம்பிகளை பெருக்கி மலேரியா நோயை பரப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது.

இதேவேளை, இதற்காக இலங்கை மலேரியா தடை இயக்கமும், மன்னார் மாவட்ட மலேரியா தடை இயக்கமும் மக்களுடன் இணைந்து மிக முனைப்பாக செயற்பட்டு வருகின்றது.

மேலும், இந்த நுளம்பு தொடர்பான விழிர்ப்பணர்வு மக்கள் மத்தியில் விரைவாக பாரப்பப்பட்டு வருவதாக மலேரியா தடை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி கே.அரவிந்தன் குறிப்பிட்டுள்ளார்.