உத்தேச அரசியல் அமைப்பு குறித்து தீர்மானம் மிக்கதோர் பேச்சுவார்த்தை இன்றைய தினம் நடத்தப்பட உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடத்தப்படும் முதலாவதும் இறுதியுமான பேச்சுவார்த்தை இதுவென சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி அமைச்சர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கட்சியின் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் இன்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நாட்டின் ஐக்கியம், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, மாகாண ஆளுனர்களுக்கான அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நிலவி வரும் மாறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது உள்ளிட்ட அரசியல் அமைப்பின் திருத்தங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதனை சுதந்திரக் கட்சியின் 80 வீதமான உறுப்பினர்கள் விரும்புவதாக குறித்த பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், இதுவரையில் ஜே.வி.பி அரசியல் அமைப்பு குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.