கேதர் ஜாதவ் பந்துவீச்சு: டோனியின் ஆலோசனைக்கு விராட் கோலி பாராட்டு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் வங்காளதேசத்தை தோற்கடித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

முதலில் விளையாடிய வங்காளதேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது. புவனேஷ்வர் குமார், பும்ரா, கேதர் ஜாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ரன் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா 40.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 265 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 123 ரன்னும், கோலி 96 ரன்னும், தவான் 46 ரன்னும் எடுத்தனர்.

இதன் மூலம் நடப்பு சாம்பியனான இந்தியா சாம்பியன்ஸ் கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு 4-வது முறையாக முன்னேறியது.

நாளை மறுநாள் லண்டன் ஓவலில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அரை இறுதியில் வெற்றி பெற்றது குறித்து இந்திய கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

மற்றொரு மனநிறைவான ஆட்டம். எங்களுக்கு ஒருங்கிணைந்த, முழுமையான ஆட்டம் தேவைப்பட்டது.

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு டாப் வரிசையில் தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பது காரணம். மிடில் ஓவர்களில் கேதர் ஜாதவ்வை பயன்படுத்த நானே முடிவு எடுக்கவில்லை.

டோனியிடம் ஆலோசனை கேட்டு ஜாதவை பந்துவீச வைக்க முடிவு செய்தேன். அந்த சமயத்தில் கேதர்ஜாதவ் சிறந்த தேர்வாக இருக்கும் என்று இருவரும் முடிவு செய்தோம்.

அவர் வலை பயிற்சியில் அதிகமாக பந்துவீசவில்லை. ஆனாலும் பந்தை எந்த இடத்தில் வீசினால் பேட்ஸ் மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று அறிந்து வைத்துள்ளார். பந்து வீசும்போது தானே பேட்டிங் செய்வது போல் நினைத்து பந்து வீசினார்.

அவர் ரன் எடுக்க முடியாத பந்துகளை வீசுவார் என்பதை அறிவோம். ஆனால் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பி விட்டார்.

ரோகித் சர்மா – ஷிகர் தவான் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இது எனது இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்த உதவியது. இருவரும் இறுதிப் போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என நம்புகிறேன்.

இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளோம். இதை மற்றொரு ஆட்டமாகதான் கருதுவோம். இறுதிப் போட்டியில் நெருக்கடி இருந்தாலும் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பாகிஸ்தானுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அந்த அணி இத்தொடரில் அருமையான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது.

அவர்கள் ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை விளையாட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளனர். இது எங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும். அவர்கள் கண்டிப்பாக நெருக்கடி கொடுக்க முயல்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.