சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்: ரசிகர்கள் உற்சாகம்

இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றி கொள்ளும். ஆனால் இரு நாட்டு பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை.

8-வது சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றன. இரு அணிகளும் மோதும் ஆட்டத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தனர்.ஜூன் 4-ந் தேதி பர்கிங்காமில் நடந்த போட்டியில் இந்தியா 124 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தற்போது இரு அணிகளும் மீண்டும் போதும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதுவும் சாம்பியன் பட்டத்துக்காக இறுதிப்போட்டியில் மல்லுக் கட்டுவது ரசிகர்களிடையே கடும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பரம எதிரியான பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்த வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் இந்தியாவும் சமபலத்துடன் திகழ்கிறது.

ஐ.சி.சி. நடத்தும் தொடரில் இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதின.

இதில் இந்தியா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் லீக் ஆட்டத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. ‘டை’ ஆன அந்த போட்டியில் ‘பவுல்-அவுட்’ முறையில் இந்தியா வென்றது.

சரியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் ஐ.சி.சி. தொடர் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்பு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால், இந்தியா – பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று யாரும் நினைக்கவில்லை. அவர்கள் கணிப்பு பொய்த்து போய் விட்டது.

எப்படி இருந்தாலும் இறுதிப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.