ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

வடமாகாண சபை உறுப்பினர்களால் வடமாகாண முதலமைச்சருக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் வடமாகாண முதலமைச்சரை அகற்றும் தமிழரசுக் கட்சியின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழ்மக்கள் பேரவையால் நாளை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன்,

நாளைய தினம் வடமாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் ஸ்தம்பிக்கச் செய்து அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று வியாழக்கிழமை(15) விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளால் முதலமைச்சராக்கப்பட்டவரை அமைச்சர்களின் முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுத்தமைக்காக மக்களின் அபிப்பிராயம் இன்றி தூக்கியெறிய முற்படும் ஜனநாயக விரோதச் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மக்கள் மயப்பட்ட போராட்டமாக தமிழ் மக்கள் பேரவையால் நாளை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது பூரண ஆதரவை வழங்குகின்றது.

இதற்காக நாளைய தினம் வடமாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் ஸ்தம்பிக்கச்செய்து அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும், அதிபர் ஆசிரியர்கள் சுகயீன லீவை அறிவித்து விடுமுறையில் நிற்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் கேட்டுள்ளது.