லண்டன்: அடுக்குமாடிக் குடியிருப்பு தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்வு

லண்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. 74-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லண்டனின் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் மக்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். எனவே வேகமாக பற்றி எரிந்த தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியது.

முன்னதாக தீவிபத்தின் போது, 120 பிளாட்டுகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் சிக்கித் தவித்ததாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருவதாக தெரிவித்த லண்டன் போலீஸ் கமாண்டர், ஸ்டூவர்ட் கண்டி உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறியிருக்கிறார். மீட்புபணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதால், அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு நாட்கள் ஆகக்கூடும் என்றும் கண்டி தெரிவித்தார்.

3வது மாடி அல்லது 4வது மாடியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம், பின்னர் தீ மளமளவென அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவி குடியிறுப்புகளை நாசம் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.