சவுதியில் சட்டவிரோத பிரஜைகள் வெளியேற பொது மன்னிப்புக் காலம்

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் பொது மன்னிப்புக் காலம் நிறைவடைவதாக சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் கைது செய்யப்படவுள்ளதுடன் மீண்டும் சவுதி அரேபியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எந்தக் காரணத்தைக் கொண்டும் பொது மன்னிப்பு காலம் விஸ்தரிக்கப்படாது எனத் தெரிவித்த சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பொது மன்னிப்பு காலப்பகுதியினுள் சவுதி அரேபியா நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இலங்கை பிரஜைகள் வெளியேறும் பட்சத்தில் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.

பொது மன்னிப்பு காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறும் குடிபெயர்ந்தவர்கள் மீண்டும் நாட்டினுள் உள்நுழைவதற்கான தகுதியை கொண்டிருப்பார்கள் எனவும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.