ஜனாதிபதியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமது வீடுகளுக்கு விசாரணைக்காக வந்த இராணுவப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் உயிருடன் இருப்பதாக தெரிவித்த தமது பிள்ளைகளை ஏன் இதுவரை விடுவிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 112 ஆவது நாளை எட்டியுள்ளது.

இதுமாத்திரமன்றி வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக முன்னெடுக்கபட்டுவரும் தொடர் கவனயீரப்பு போராட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டநிலையில் இன்று 108 ஆவது நாளை எட்டியுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்றுடன் 98 ஆவது நாளை எட்டியுள்ளது.

வடமராட்சி கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டம் இன்று 92 ஆவது நாளை எட்டியுள்ளது.

கிழக்கு மாகாணம் திருகோணமலையில் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் கடந்த மார்ச் மாதம் நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் நூறாவது நாளை கடந்தும் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் மூன்று மாதத்தை கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.