வடக்கு விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்

வடக்கு மாகாண சபையின் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாத அமர்வுகளில் என் மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளபோது நான் அவை ஆதாரம் இல்லாத அபாண்டமான திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்றும்இ நான்கு கோடி அல்லஇ நானூறு ரூபா தன்னும் நான் நிதி ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அதை நிரூபியுங்கள் என்றும் தெரிவித்திருந்தேன்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு இப்போதும் அதுவாகவே இருக்கிறது. மக்கள் என்மீது கொண்டிருந்த நல்லபிப்பிராயம் காரணமாகவே வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று என்னால் வெற்றி பெற முடிந்தது.

வாக்குகளைப் பணம் மூலம் வாங்குவதற்கு நான் பணம் படைத்தவன் அல்ல. தேர்தல் காலத்தில் எனக்கு நானே ஒளிவட்டம் போட்டு கிரீடம் சூட்டி மக்களை வசீகரிக்கும் விளம்பரங்களைச் செய்வதற்கு நான் ஊடகப் பலம் கொண்டவனும் அல்ல.

என் வாழ்வுமுறையினூடாக ஒரு ஆசிரியனாக நான் சிறுகச் சிறுகச் சம்பாதித்து வைத்த நற்பெயர்தான் எனது மூலதனம். ஆனால் எனது பெயருக்குக் களங்கம் கற்பித்து எனது ஆளுமையைப் படுகொலை செய்து அரசியல் அரங்கில் இருந்தும் பொதுவாழ்க்கையில் இருந்தும் என்னை அகற்றும் நோக்குடன் பொய்யான குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டு வந்துள்ளன.

இப்போது என் மீது மட்டுமல்ல சகல கௌரவ அமைச்சர்கள்மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென கௌரவ முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளன.

இந்த அறிக்கையில் நான் கையூட்டுப் பெற்றதாகவோ ஊழல் புரிந்ததாகவோ நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகவோ விசாரணைக்குழுவினர் எங்கும் குறிப்பிடவில்லை.

அவர்கள் மட்டுமல்ல எவர்களாலுமே இவ்வாறு குறிப்பிட முடியாது. இந்த இழிசெயலில் அமைச்சராகப் பணிபுரியும் இக்காலப்பகுதியிலோ அல்லது அரசியலுக்கு வர முன்னரோகூட நான் ஈடுபட்டதில்லை.

வருங்காலத்தில் சோற்றுக்கு வழியின்றித் தவிக்கும் ஒரு நிலை வந்தாலும்கூட இவ்வீனச் செயலில் நான் ஈடுபடப்போவதில்லை.

ஆனால் நான் இத்தகையவன் என்ற ஒரு மாயத்தோற்றத்தை என்பற்றிய தவறான ஒரு விம்பத்தைப் பொதுமக்களிடையே ஏற்படுத்தி எனது அரசியல் வாழ்க்கையை முடிவுறுத்தும் விதமாக இந்த அறிக்கை அமைந்துள்ளதென்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.

இந்த அறிக்கையில் விசாரணையின் போது நானும் திணைக்கள அதிகாரிகள் பலரும் தெரிவித்த பல விடயங்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை. நான் தெரிவித்ததாக தெரிவிக்காத விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிழையான விடயங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மோசடி ஊழல் கையூட்டு நிதி விரயம் போன்ற சொற்களுக்கான அர்த்தச் செறிவுகள் வேறானவை. ஆனால் இந்த அறிக்கையை மேலோட்டமாகப் படிப்பவர்கள் தவறான முடிவுக்கு வரும் விதமாக இச்சொற்களை மனம்போன போக்கில் பயன்படுத்திவிட்டு என்னைப் பதவி விலக வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவற்றின்மூலம் விசாரணைக்குழுவில் உள்ள சிலர் எப்படியாவது என்னைக் குற்றவாளியாக்கிவிட வேண்டும் என்ற முன்கூட்டிய முடிவுடன் ஏதோ ஒரு சூழ்ச்சி நிரலில் செயற்பட்டுள்ளார்கள் என்றே நான் கருதுகின்றேன்.

பணி செய்வதற்குப் பதவி அவசியம் இல்லை. முதலமைச்சர் அவர்கள் இடும் உத்தரவு எதுவோ அதனை நான் சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்வேன். ஆனால் பொய்யான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுடன் செல்வதற்கு மனம் ஒப்பவில்லை.

அவ்வாறு செய்தால் செய்யாத குற்றங்களை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டதாகிவிடும். இதனால் ஏற்படும் அவப்பெயர் தலைமுறைகளுக்கும் நீளும். அந்தவகையில் எனது தன்னிலை விளக்கத்தைக் கருத்தூன்றிக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் விசாரணைக்குழு தெரிவித்திருக்கும் அவதானங்கள் மற்றும் முடிவுகள் தொடர்பாக நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

அதற்கு முன்பாக ஒட்டுமொத்த விசாரணை அறிக்கையிலும் மேலோங்கி நிற்கும் மூன்று விடயங்கள் தொடர்பாக நான் விளக்கம் அளிப்பது அவசியமாகும்.
1. என்மீதான இலஞ்சம் ஊழல் நிதிமோசடிக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதை உய்த்தறிவுகளாக வெளிப்படுத்திய விசாரணைக்குழு தனது முடிவில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

எனக்கு எதிராகப் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவை தொடர்பிலான விசாரணைக்குழுவின் அவதானிப்புகளும் முடிவுகளும் அறிக்கையின் 4.1 முதல் 4.10 வரையான பந்திகளில் காணப்படுகின்றன. இவற்றில் இலஞ்சம்இ நிதிவிரயம்இ மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் 4.1, 4.2, 4.4,  4.5 மற்றும் 4.7 ஆகிய பந்திகளில் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

இக்குற்றச்சாட்டுகளில் இலஞ்சம் ஊழல் நிதிமோசடி இடம்பெற்றிருப்பதாக நிரூபிக்கப்படவில்லை என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

இது விசாரணைக்குழுவின் உய்த்தறிவுகளாக இருக்க அவர்களின் முடிவுகள் மற்றும் விதந்துரைப்புகள் குழுவின் உய்த்தறிதலுக்கு முற்றிலும் முரணானவையாக உள்ளன.

ஊழல் மற்றும் நிதி மோசடியை நிரூபிக்க ஆதாரம் இல்லை என உய்த்தறிந்த விசாரணைக்குழுவினர் எவ்வாறு பக்கம் 79இல் வடமாகாண விவசாய அமைச்சர் ஊழல் செய்துள்ளதாக முடிவுறுத்துகிறார்கள்?

குற்றம் எண்பிக்கப்படவில்லை எனக் கூறும் விசாரணைக்குழுவினர் எவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டதாக முடிவுறுத்துகிறார்கள்?

ஆகவே ஏற்கனவே என்னைப்பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவை எடுத்துவிட்டு அதற்கான சாட்சியங்களை முடிவெடுத்ததன் பின் முடிவிற்கான காரணங்களைத் தேடும் வகையில் தேடி அவை கிடைக்கப்பெறாதபோது தாம் முன்கூட்டி எடுத்த முடிவுகளையே பரிந்துரைகளாக முன்வைத்துள்ளார்கள்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றிய இருவர் உறுப்பினர்களாக அமையப்பெற்ற இந்தக் குழு ஆதாரங்கள் இல்லை எனக் கண்டதன் பின்னரும் ‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றங்கள்’ நிரூபிக்கப்பட்டுள்ளன எனக் கூறுவது மிகவும் அடிப்படையான குற்றவியல் கோட்பாடுகளை மீறுவதாகவே அமைந்துள்ளது.

மேலும் ஓரு பூர்வாங்க அறிக்கை ஒரு குற்றவியல் விசாரணையாக இருக்க முடியாது என்று தெரிந்திருந்தும் குற்றவியல் சட்டத்திலும் எண்பியல் சட்டத்திலும் அதிஉச்ச எண்பிக்கும் பொறுப்பைக் கோரும் ‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப் பட்டுள்ளதாகக் கூறுவது மிகவும் அடிப்படையிலான சட்டத்தவறென்றே எண்ணுகின்றேன்.

அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளவற்றை வாசிக்க பொதுமக்களுக்கு நேரம் கிடைக்காது அவைதொடர்பிலான உண்மை நிலையை விளங்கிக் கொள்ள அவர்களுக்கு அவகாசம் கிடைக்காது அவர்கள் முடிவுகளிலேயே கவனம் செலுத்துவார்கள் அவையே ஊடகங்களில் பரபரப்பான தலைப்புச் செய்திகளாகவும் வரும் என்ற துணிவில் தமது உய்த்தறிவுகளும் பரிந்துரைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருக்க வேண்டும்.

என்பது தொடர்பில் விசாரணைக்குழு கவனம் செலுத்தாமல் விட்டுள்ளது. இக்காரணங்களினாலேயே விசாரணைக்குழு என்னைக் குற்றவாளியாக்கிவிட வேண்டும்

என்ற முன்கூட்டிய முடிவுடன் ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டுள்ளது என்று குறிப்பிட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

2. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவர் சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களில் தலையிடுவதை விசாரணைக்குழு சட்டபூர்வமற்றதென நிறுவ முயன்றுள்ளது.

குற்றச்சாட்டுகள் 4.1 மற்றும் 4.6 பகுதியளவில் அமைச்சரின் சட்ட அதிகார எல்லைகளுடன் சம்பந்தப்பட்டவை ஆகும். மாகாண அமைச்சர் ஒருவருக்கு ஒருங்கிய நிரலின் கீழ் உள்ள விடயம் ஒன்று தொடர்பில் (மத்திய மாகாண அரசாங்கங்கள் இரண்டுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில்) நிறைவேற்று அதிகாரம் உண்டா என்பது தொடர்பிலானதாகும்.

குறிப்பாக ஒருங்கிய நிரலில் இடம்பெறும் விடயம் ஒன்று தொடர்பில் மாகாணசபையால் ஆக்கப்பட்ட சட்டம் ஒன்று இல்லாதபோதும் அவ்விடயம் தொடர்பில் மாகாண அமைச்சர் நிறைவேற்று அதிகாரம் உள்ளவரா என்பது தொடர்பிலான கேள்வி ஆகும்.

இக்கேள்விக்கு தற்போதைய அரசியல் அமைப்பின் கீழோ ஆக்கப்பட்ட சட்டங்களின் கீழோ நேரடியாகப் பதில் வழங்கப்படவில்லை. ஆனாலும் தற்போது நிலவும் சட்டங்களின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை மேலும் வலுப்படுத்தும் ஓர் விடை ஒன்று பெறப்பட முடியும்.