தபால் சேவைகள் முடக்கம் ஊழியர்கள் போராட்டம்

தபால் சேவை ஊழியர்களின் பணி நிறுத்தப் போராட்டம் காரணமாக நாடெங்கிலும் அனைத்து தபால் சேவைகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி தொடக்கம் தபால் சேவை ஊழியர்கள் இந்த பணி நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
48 மணித்தியாலயங்கள் இந்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஏற்கனவே ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் முன்னணி கூறுகின்றது
தங்கள் தொழில்சார் தொடர்பான சில கோரிக்கைகளுடன் பழமை வாய்ந்த தபால் அலுவலக கட்டிடங்களை சுற்றுலா விடுதிகளாக மாற்றியமைக்கும் யோசனை கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த போராட்டத்தின் போது முன் வைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா கண்டி மற்றும் காலி தபால் அலுவலக கட்டிடங்களை சுற்றுலா விடுதிகளாக மாற்றிமைக்கும் வகையில் இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக தபால் தொழிற்சங்கங்களினால் கூறப்படுகின்றது. இதனை தபால் அமைச்சு மறுக்கின்றது.
தபால் சேவை ஊழியர்களின் பணி நிறுத்த போராட்டம் காரணமாக அனைத்து தபால் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. தபால் விநியோகம் உள்ளிட்ட எந்தெவொரு சேவையும் இடம் பெறாமையால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னதாக சாதகமான பெறுபேறு தபால் அமைச்சிடமிருந்து கிடைக்கா விட்டால் 26ம் திகதி தொடக்கம் காலவரை இன்றி பணி நிறுத்த போராட்டம் தொடரும் என ஓன்றினைந்த தபால் தொழிற்சங்கங்களின் முன்னணியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.