அதிரடியாக ஆடி ஆட்டத்தை மாற்றினார்: யுவராஜ் சிங்குக்கு கோலி பாராட்டு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 124 ரன்னில் வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

பர்மிங்காமில் நடந்த 4-வது ‘லீக்’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன் குவித்தது.

ரோகித்சர்மா 91 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) கேப்டன் விராட் கோலி 68 பந்தில் 81 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), தவான் 68 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), யுவராஜ்சிங் 32 பந்தில் 53 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அசார்அலி, சதாப்கான் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இந்திய அணி விளையாடும் போது மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தானுக்கு 48 ஓவர்களில் 325 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆடும் போது 5-வது ஓவரில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைப்பட்டது. இதனால் 41 ஓவர்களில் 289 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை மளமள என்று பறிகொடுத்தன. அந்த அணி 33.4 ஓவர்களில் 164 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 124 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வகாப் ரியாஸ் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை.

தொடக்க வீரர் அசார்அலி அதிகபட்சமாக 50 ரன்னும், முகமது ஹபீஸ் 33 ரன்னும் எடுத்தனர். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், ஹார்த்திக் பாண்டியா ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். யுவராஜ்சிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

எங்களது ஆட்டம் முற்றிலும் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பீல்டிங் தான் மோசமாக இருந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு 10-க்கு 9 மதிப்பெண் கொடுக்கலாம்.

ஆனால் பீல்டிங்குக்கு 10-க்கு 6 மதிப்பெண் தான் கொடுக்க இயலும். பீல்டிங்கில் 8 அல்லது 9 மதிப்பெண்ணை பெறும் போது நாங்கள் இந்த தொடரில் வலிமையான அணியாக திகழ்வோம். பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ரோகித் சர்மாவும், தவானும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். கடந்த முறை நாங்கள் கோப்பையை வென்றபோது தொடக்க ஜோடி முக்கிய பங்கு வகித்தது. ரோகித்சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். சர்வதேச போட்டி ஐ.பி.எல்.லில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது. அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன்களை குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

யுவராஜ்சிங்கின் ஆட்டம் முற்றிலும் மாறுப்பட்டது. நான் ரன்களை எடுத்தபோது அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் இடிபோல இருந்ததை என்னால் எதிர்முனையில் இருந்து உணரமுடிந்தது. அவரது இன்னிங்ஸ் தான் ஆட்டத்தை மாற்றிவிட்டது.

ஹர்த்திக் பாண்டியா 5 பந்தில் 18 ரன்களை எடுத்தது மிகவும் அபாரமானது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்பதால் 4 வேகப்பந்து வீரர்களுடன் ஆடினோம். அவர்கள் சுழற்பந்தில் நன்றாக ஆடுவார்கள்.

மேலும் பெரும்பாலானவர்கள் வலது கை பேட்ஸ்மேன்கள். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து தான் பவுலர்கள் இடம் பெறுவார்கள்.

இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறும்போது 40 ஓவர் வரை எல்லாம் நன்றாகவே இருந்தது. கடைசி 8 ஓவர்களில் தான் ரன்களை வாரி கொடுத்துவிட்டோம். இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.

இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இலங்கையை 8-ந்தேதி (வியாழக்கிழமை) சந்திக்கிறது.