தொப்புள் கொடி உறவுகளின் விடுதலைக்காக குரல்கொடுப்போம் : அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

தொப்புள் கொடி உறவுகளின் விடுதலைக்காக குரல்கொடுப்போம் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையினர் இது தொடர்பாக இன்று (04) அறிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக அர்ப்பணிப்புடன் கூடிய அக்கறையுடன், உறுதியாகவும் உண்மையுடனும் செயல்பட்டு வருகின்ற தொப்புள் கொடி உறவுகளின் வரிசையில் சென்ற வாரம் திருமுருகன்காந்தியும் ஏனைய மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் இந்திய அரசால் குண்டர் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது நீதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயலாகும்.

இந்தியா மற்றும் சர்வதேச அரங்கில் இனப்படுகொலைக்கு நீதி கோருவதிலும், குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதிலும், இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூர்வதிலும் திருமுருகன்காந்தியும், மே 17 இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்களின் செயற்பாடும் கவனத்தில்கொள்ள வேண்டியது.

நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், தமிழீழம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் பங்கேற்கிற பொதுவாக்கெடுப்பு வேண்டும் என்கிற இவர்களின் குரல் தொடர்ந்தும் உலகப்பரப்பெங்கும் ஒலிக்கவேண்டும்.

மே 17 இயக்க உறுப்பினர்களின் நீதியான போராட்டங்களுக்கு எமது தோழமையை தெரிவித்துக்கொள்ளும் அதேநேரத்தில் எந்த நிபந்தனைகளும் இன்றி அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம் எனவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.