நல்லாட்சி அரசாங்கத்தின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது: விஜேதாச ராஜபக்ஷ

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வரமுன்னர் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது என்று நீதி, புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணலில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கும் தேவை அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் இருந்தது. அதன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்துக்கு பொதுமக்கள் வாக்களித்தனர்.

அதற்காக நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது. உலகின் எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு அரசாங்கமும் தான் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதாக கூறமுடியாது.

இருந்தபோதிலும் 18வது; திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை, சுயாதீன ஆணைக்குழுக்கள் என்று இந்த அரசாங்கம் ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.

ஆரம்பத்தில் இரண்டு வருடங்களுக்கு மட்டும் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுப்பதாக உத்தேசித்திருந்தாலும் தற்போது இந்தப் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் வரை (2020) இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனித்து தேர்தல்களில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமானது. அதன் மூலம் அடுத்த தேர்தலில் தனித்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ஐக்கிய தேசியக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

சரத் பொன்சேகா அமைச்சராக இருந்தாலும் ஒன்றுமே இல்லாத டம்மி அமைச்சர்தான். அவருக்கு எந்தவொரு துறையும் ஒதுக்கப்படவில்லை. ஒரு காலத்தில் என்னிடம் அவர் உள்ளிட்டவர்கள் உதவிகளைப் பெற்றுள்ளார்கள் .

இந்த அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சரும் அதிகாரம் படைத்த அமைச்சர் அல்ல. அனைவரும் சமமான அதிகாரம் கொண்ட அமைச்சர்களே என்றும் விஜேதாச ராஜபக்ஷ தனது நேர்காணலில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.