இந்தியா- பாக். போட்டிக்கு எந்த விஷேசமும் இல்லை, வழக்கமானதுதான் என்கிறார் அசார் அலி

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் எல்லைத் தாண்டிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வருவதால் பாகிஸ்தானோடு இந்தியா கிரிக்கெட் விளையாடாது என்று இந்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் கடந்த சில வருடங்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையில் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

ஐ.சி.சி. நடத்தும் பொதுவான போட்டிகளில் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை.

இன்று தொடங்கியுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளன.

இரு அணிகளும் வருகிற 4-ந்தேதி நடக்கும் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை உலகளவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் கிரிக்கெட் விமர்சகர்களும் இந்த போட்டி குறித்து அதிக அளவில் பேசி வருகிறார்கள்.

ஆனால், இரு நாட்டு வீரர்களும் இந்த போட்டிக்கென தனி விஷேசம் ஒன்றுமில்லை. மற்றொரு போட்டி போன்றதுதான் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தொடக்க வீரருமான அசார் அலியும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து அசார் அலி கூறுகையில் ‘‘இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி மற்றொரு போட்டிதான். இந்த போட்டி தொடங்கும்போது வழக்கமான மிகவும் சாதாரணமான போட்டியாக தோன்றும் என்று நினைக்கிறேன். வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவகையில் விளையாடுவார்கள். தொழில்முறை வீரர்கள் எதையும் பற்றி கவலைப்படாமல் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் சிறந்ததுதான். அதுவும் எட்ஜ்பாஸ்டன் எப்போதும் மிக மிக சிறந்த சூழ்நிலை. இந்த தொடரில் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கு முன் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடியுள்ளோம். ஆகவே, எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.