பாரிய நிதியொதுக்கீட்டில் மீண்டும் மகாவலி அபிவிருத்தித்திட்டங்கள்! ஜனாதிபதி தகவல்

எதிர்வரும் நாட்களில் பாரிய நிதியொதுக்கீட்டில் மீண்டும் மகாவலி அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த அமரவீர நேற்று தனது புதிய அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வருகை தந்திருந்தார்.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பதவியேற்பின் பின்னர் அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அமைச்சர் மஹிந்த அமரவீர ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் இதுவரை இந்த அமைச்சில் பிரதியமைச்சராக பணியாற்றும் அனுராத ஜயரத்னவின் பணிகள் மற்றும் பொறுப்புகளில் எந்தவொரு தலையீடும் இருக்காது.

அதற்குப் பதிலாக புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மஹாவலி அபிவிருத்தித் திட்டங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். எதிர்வரும் நாட்களில் 2ஆயிரம் பில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் புதிய மகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

முன்னைய மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் கடைசி செயற்திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுமானப் பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ளது.

இனி மொரகஹகந்த நீர்த்தேக்கமும் மகாவலி அபிவிருத்தித் திட்டப் பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.