தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.
மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்டவிரோதமாக கூடியதாக கூறி நால்வரையும் பொலிசார் கைது செய்தனர், இந்நிலையில் நேற்று நால்வர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், இன்று திரைப்பட இயக்குனர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பாரதிராஜா, திருமுருகன் என்ன கொலையாளியா, எதற்காக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மத்திய அரசை விமர்சித்ததால் இப்படி செய்வதா? நானும் தான் சில ஆண்டுகளுக்கு முன் நினைவேந்தலுக்கு சென்றேன்.
நான் பிரபாகரனையே நேரில் சந்தித்திருக்கிறேன். அதைப்பற்றி பொதுத்தளத்திலும் பேசியிருக்கிறேன். அதற்காக என்மீதும் குண்டர் சட்டத்தைப் பதிவு செய்யுங்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை, தமிழனே தலைவனாக வேண்டும், இந்த மண்ணை ஆள மற்றவர்களுக்கு உரிமையில்லை.
மற்ற மாநிலத்தவர்கள் வந்து வாழட்டும், அதற்காக சம பங்கு கொடுக்க முடியாது.
ரோஷம், மானம் இருந்தால் நால்வரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும், மத்திய அரசுக்கு பயந்தே தமிழக அரசு இதை செய்துள்ளது என காட்டமாக பேசியுள்ளார்.







