ஒன்றரை வருடங்களின் பின்னர் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்ட பிரதமர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட மருத்துவத் தேவைகளுக்காக ஒன்றரை வருடங்களின் பின்னர் ஓய்வொன்றை எடுத்துக் கொண்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு தடவை சிங்கப்பூருக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு தனது உடல்நிலை குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்.

நாட்டின் முன்னேற்றம் கருதிய பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்கள் காரணமாக பிரதமர் ரணில் தனது தனிப்பட்ட மருத்துவ விடயங்கள் குறித்து கவனம் செலுத்த முடியாத நிலையை எதிர் கொண்டிருந்தார்.

இந்நிலையில் தொடர்ச்சியாக அவரது மருத்துவர்கள் அறிவுறுத்தியதற்கு ஏற்ப தற்போது மருத்துவ ஓய்வில் அமெரிக்கா சென்றுள்ளார்.

எனினும் அங்கிருந்தபடியே இலங்கையின் அனர்த்த நிலைமை தொடர்பாக கவனம் செலுத்துவதுடன், தேவையான வழிகாட்டுதல்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.