எதிரிகளால் ஏற்படும் ஆபத்தை நீக்கும் பரிக்கல் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர்

தென்தமிழ் நாட்டில் ஸ்ரீநரசிம்மர் குடியிருக்கும் சில தலங்களை, அஷ்ட நரசிம்ம தலங்களாகப் போற்றுவர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது பரிக்கல். விழுப்புரம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல்.

ஸ்ரீநரசிம்மருக்காக வசந்தராஜன் என்ற மன்னனால் ஆரம்பிக்கப்பட்ட கோயில் திருப்பணி, பரிகலாசுரனால் தடைப்பட்டது. அரசன், தன் குருநாதரான வாமதேவ முனிவரை அணுகினான். வேறோர் இடத்தில் கோயில் கட்டுமாறு அறிவுறுத்திய வாமதேவர், அதற்காக மூன்று நாட்கள் இரவும் பகலும் இடையறாது வேள்வி நடத்துமாறும் மன்னனைப் பணித்தார். அதன்படியே வேள்வி தொடங்கியது.

அதையறிந்து ஆவேசத்துடன் வந்த அசுரன், வேள்விச்சாலையைச் சிதறடித்தான். மன்னனைத் தேடினான். வசந்தராஜனோ, குருதேவரின் அறிவுரைப்படி புதரில் மறைந்திருந்து, மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். அசுரன், புதரை விலக்கி மன்னனைத் தாக்கினான்; கோடரியால் வசந்தராஜனின் தலையைப் பிளந்தான்.

முன்பு, தூணைப் பிளந்து வெளியேறி இரண்யனை வதைத்த நரசிம்மர், இப்போது அசுரனால் பிளக்கப்பட்ட வசந்தராஜனின் தலையில் இருந்து தோன்றி, பரிகலாசுரனை வதைத்தார். பிறகு, மன்னனை உயிர்ப்பித்து, ஸ்ரீலட்சுமி நரசிம்மராகக் காட்சி தந்தார். பரிகலாசுரனை வதைத்ததால் இந்தத் தலம் பரிகலாபுரம் எனப்பட்டு, பிறகு பரிக்கல் என்று மருவியதாம். இந்தத் தலம் வந்து ஸ்ரீநரசிம்மரை வழிபட, கடன்களும் நோய்களும் தீரும்; எதிரிகளால் ஏற்படும் ஆபத்துகள் விலகும் என்பர்.