இலங்கை துறை லங்கா பட்டுணவாக மாற்றம்!!

திருகோணமாலை, சம்பூர் – வெருகல் கிராமங்களை இணைக்கும் “இலங்கை துறை” என அழைக்கப்பட்ட பாலம் “லங்கா பட்டுண” என சிங்கள மொழியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை இந்த நாட்டி ல் தமிழ் மக்களின் பரிதாபக்கோலத்தை அடிக்கோடிட்டு காட்டுவதாக ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், திருகோணமலை மாவட்டத்தில் வெருகல்- சம்பூர் கிராமங்களை இணைத்து கடந்த 20ம் திகதி பாலம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி, அமைச்சர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனும் கலந்து கொண்டார்.

குறித்த பாலம் பாரம்பரியமாக இலங்கை துறை முகத்துவாரம் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் கடந்த 20ஆம் திகதி பாலம் திறக்கப்பட்டபோது “லங்கா பட்டுண” என சிங்கள மொழியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதி மகாவலி கங்கை கடலுடன் கலக்கும் பகுதியாகும். அதேபோல் பாரம்பரியமாக இந்த பகுதி தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதி என்பதுடன், இந்த பாலம் இணைக்கும் இரு கிராமங்களும் தமிழ் கிராமங்களாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் முழு மூச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வந்ததை நாங்கள் அறிவோம்.

இதன் பின்னணியில் திருகோணமாலை மாவட்டத்தை முழுமையாக சிங்கள மயமாக்கும் பேரினவாத சக்திகளின் திட்டத்தின்படி மேற்படி இரு கிராமங்களை இணைக்கும் பாலத்திற்கு சிங்கள மொழியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மறுபக்கம் இந்த நாட்டில் தமிழர்களின் பரிதாப கோலத்தை இந்த பாலத்தின் பெயர் மாற்றம் சுட்டிக்காட்டுகின்றது. இதேபோல் இந்த பெயர் மாற்றத்தை தமிழ்பேசும் மக்கள் ஏற்று கொள்ளப்போவதில்லை.

எனவே மேற்படி பாலம் மீண்டும் பாரம்பரிய தமிழ் பெயருக்கு மாற்றப்பட்டு இலங்கை துறை என்றே அழைக்கப்பட வேண்டும். அதனை உறுதி செய்யவேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும்.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் துரைரட்ண சிங்கம் ஆகியோரை சாரும். அவர்கள் இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்தி மேற்படி பாலத்தின் பெயரை தமிழ் மொழிக்கு மாற்றவேண்டும்.

அவ்வாறு அவர்களால் முடியாதுபோனால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான தீர்வினை எப்படி இவர்களால் எடுக்க முடியும் என்ற கேள்வி எழும்.

எனவே அவர்கள் இந்த விடயத்தில் கூடிய ளவு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போர் காலத்தில் மன்னார் பிரதேசம் கைப்பற்றப்பட்டபோது பறையனாளங்குளம் சப்புமல்புர என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அந்த பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர் பலகையை அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அனுரத்த ரத்வத்த திறந்து வைத்தார்.

எனவே தொடர்ச்சியான பெயர் மாற்றங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.