காலா படத் தலைப்பு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் விளக்கம்

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-பா.ரஞ்சித் இணையும் புதிய படத்திற்கு ‘காலா’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே.28-ந் தேதி தொடங்கவிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ‘காலா’ படத் தலைப்பு குறித்து இயக்குனர் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘காலா’ என்றால் காலன், எமன் என்று பொருள் கொள்ளலாம். ‘கரிகாலன்’ என்ற தலைப்பின் சுருக்கம்தான் ‘காலா’. இப்படத்தில் நடிக்கவிருக்கும் பிற நடிகர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்கவுள்ளோம்.

முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அதனைத் தொடர்ந்து சென்னையிலும் நடத்தவுள்ளோம். இப்படத்தின் கதை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். ‘காலா’ என்ற தலைப்பை சொன்னதும் ரஜினிக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. ‘கரிகாலன்’ அவருக்கு மிகவும் பிடித்த பெயர். படத்தை எப்போது வெளியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளோடு ‘காலா’ இருக்கும் என்றார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்தை தனுஷ் தனது வுண்டார்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.