ஞானசார தேரர் தலைமறைவு! கொழும்பு ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி பொலிசாரினால் முற்றுகை!

கொழும்புக்கு அண்மித்த ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி தற்போது பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு, ஞானசார தேரரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்படவிருந்த ஞானசார தேரர் சுகவீனம் என்று கூறி நேற்றைய தினம் நீதிமன்றத்தில் சமூகமளிப்பதில் இருந்தும் தவிர்ந்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர் வழக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது தலைமறைவாகி விட்டதாகவும், அவரை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று முன்னிரவில் பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஞானசார தேரரின் மொபைல் போனை எடுத்துக் கொண்டு ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதிக்கு வந்துள்ளார்.

அவரைப் பின்தொடர்ந்து வந்த பொலிசார் தற்போது குறித்த குடியிருப்புத் தொகுதியை முற்றுகையிட்டு விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

ரோயல் பார்க் தொகுதியில் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் இந்திக சமரவீரவுக்கு சொந்தமான வீடு ஒன்றும் அமைந்துள்ளது.

இவர் ஊடாகவே அண்மைக்காலங்களில் பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியை நெருங்கி தமக்குத் தேவையான ஆதரவினைப் பெற்றுக் கொண்டிருந்தாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

அத்துடன் டிலந்த விதானகே அடிக்கடி ரோயல் பார்க் வந்து ஜனாதிபதிக்கு நெருக்கமான இந்திக சமரவீர மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோருடன் நள்ளிரவு வரை ரகசிய கலந்தாலோசனைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.