சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமா?

நீரிழிவு நோய் என்றாலே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் என்று தானே பொருள். மருந்து, ஊசி, உணவு கட்டுப்பாடு இவற்றின் மூலம் சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்தாலும் திடீர் திடீர் என சிலருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாய் கூடி இருக்கும். இதன் காரணங்களை அறிந்து தவிர்த்து விட்டால் இவ்வாறு ஏற்படாதவாறு நன்மை காத்துக் கொள்ளலாம்.

பொதுவில் நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ் தான் நமக்கு சக்தி தருகின்றது. கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனையும், என்ஸைமையும் சுரக்கின்றது. என்ஸைம்கள் உணவை உடைக்கின்றன. இன்சுலின் அதனை குளுக்கோசாக திசுக்கள் எடுத்துக் கொள்ள செய்கின்றது. கணையம் தேவையான அளவு இன்சுலினை சுரக்காவிடிலும் அல்லது திசுக்கள் இன்சுலின் செல்லாக்கத்திற்கு எதிர்ப்பாக இருப்பதால் திசுக்களில் குளுக்கோஸ் ஓடுது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து வருவதனை நாம் சர்க்கரை நோய் என்கின்றோம்.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிமருந்து இவற்றின் மூலம் இதனை கட்டுப்பாட்டில் வைத்தாலும் திடீர் திடீர் என அதிக அளவு பரிசோதனையில் காணும்பொழுது பாதிப்புடையவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவர். இதற்கான காரணங்களை முதலில் பார்ப்போம்.

* தூக்கம்: சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான அளவு தூக்கம் இல்லாவிடில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. 7- 8 மணி நேர தூக்கம் இவர்களுக்கு அவசியம்.

* அதிக வேதனை, மனஉளைச்சல் ஏற்படும் பொழுது சுரக்கும் ஹார்மோனால் இன்சுலின் தனது வேலையினை சரிவர செய்ய இயலாது. எனவே தியானம், யோகா இவற்றின் மூலம் மனஉளைச்சலை நீக்குவது நல்லது.

* உடல் உழைப்பு இல்லையெனில் உடலில் சர்க்கரை கூடி விடும். எனவே தவறாது உடற் பயிற்சி, நடைபயிற்சி செய்யுங்கள்.

* வேறு நோய்க்காக நீங்கள் எடுக்கும் ஒரு சில மருந்தினால் சர்க்கரை அளவு கூட வாய்ப்புண்டு. மருத்துவர் ஆலோசனை பெறவும்.

* புகை பிடித்தல் பழக்கம் இருந்தால் சர்க்கரை அளவினை ரத்தத்தில் கட்டுப்படுத்துவது கடினம். ஆக புகை பிடிப்போர் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் இப்பழக்கத்தை உடனடியாக கைவிடுங்கள்.

* சர்க்கரையோ, மாவு சத்தோ கண்டிப்பாய் சர்க்கரை அளவினை கூட்டும். எனவே உங்கள் உணவில் ஏதேனும் மாறுபாடு ஏற்பட்டுள்ளதா என கவனியுங்கள்.
காரணம் எதுவாயினும் மருத்துவ உதவியும் அதன்படியான சிகிச்சை முறையும் அவசியம்.

அறிகுறிகள் :

* வயிற்று பிரட்டல், வாந்தி
* மூச்சு வாங்குதல்
* வறண்ட வாய்
* அதிக சோர்வு
* குழப்பம்
* பார்வை மங்குதல்
* தீராத தாகம்
* சிறுநீர் அடிக்கடி போகுதல்
* தலைவலி போன்றவை ஆகும்.

சர்க்கரை நோயின் பாதிப்புகள் ஆபத்தாக இருக்கும் என்பதால் உடனடி சிகிச்சை என்பது மிக அவசியம் என்பதனை உணர வேண்டும். இன்று இன்சுலின் போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகின்றது. தேவை என்று வரும் பொழுது அனைவரும் இதனை முறையாய் கற்றுக் கொண்டு விடுகின்றனர். என்றாலும் சில நேரங்களில் முறையான அளவு இல்லாமல் கூடுதலாக எடுத்துக் கொள்வதால் ஆபத்தான நிலைக்கு கொண்டு விட்டு விடுகின்றது.

* சாப்பிடும் முன் அவர்கள் சர்க்கரையின் அளவு
* அவர்கள் எடுத்துக் கொள்ளும் கார்போஹைடிரேட்டின் அளவு
* அவர்களின் அன்றாட உழைப்பின் அளவு
இவைகளைக் கொண்டே மருத்துவர் ஒருவரின் இன்சுலின் தேவையினை முடிவு செய்கின்றனர்.

இன்சுலின் வேலை சர்க்கரையை எரித்து சக்தியாக மாற்றுவதாகும். தவறுதலாக அதிக இன்சுலின் எடுத்துக் கொண்டால் திடீரென சர்க்கரையின் அளவு அதிகம் ரத்தத்தில் குறைந்து விடும். நீரிழிவு நோயாளிகளுக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி சர்க்கரை அளவு ரத்தத்தில் குறைவது மிகுந்த ஆபத்தில் கொண்டு விடும். ஆகவே இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் சிறு சந்தேகம் கூட இல்லாது இன்சுலின் போட்டுக் கொள்ளும் முறையினை அறிவது மிக மிக அவசியம். இன்சுலின் அதிகமாக எடுத்துக் கொண்டுவிட்டால் ஏற்படும் அறிகுறிகள்.

* குழப்பம்
* எரிச்சல்
* படபடப்பு
* உடல் நடுக்கம்
* மயக்கம்
* அதிக இருதய துடிப்பு
* பார்வை கோளாறு
* அதிக வியர்வை
என இருக்கும் இவர்கள் உடனடியாக சிறிது சர்க்கரையோ, குளுக்கோசோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

* உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவினை பரி சோதிக்க வேண்டும்
* மருத்துவ உதவி மிக மிக அவசியம்
இன்சுலின் போட் டுக் கொள்பவர் கள் அதற்கான உரிய நேரத்தில் முறையான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.