ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுகின்ற வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன்

புதிய அரசை எங்களது தலைமையில் தெரிவு செய்து ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுகின்ற அந்த வாய்ப்பை எங்களுடைய மக்கள் வழங்கியுள்ளனர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட செயலக நிர்வாக கட்டடம் நேற்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறந்து வைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எங்களுடைய மாவட்டம் போரால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலே எங்களுடைய மக்களின் பிரச்சினைகள், ஏராளமாக இருக்கின்றது. மன்னார் மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எங்களுடைய அமைச்சரவை அடிக்கடி வர வேண்டும்.

ஏன் என்றால் எமது மக்கள் கடலிலும் பிரச்சினை, நிலத்திலும் பிரச்சினை என தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்குள் இருந்து கொண்டிருக்கின்றனர். எனவே எங்களுடைய மக்களுக்கு நம்பிக்கையுடன் இருக்கின்ற நீங்கள் உதவி செய்ய முன் வர வேண்டும்.

அதன் காரணமாக தான் உங்களை நம்பி எங்களுடைய மக்கள் தங்களுடைய தேவையை போராட்டங்களினூடாக வௌிப்படுத்தி வருகின்றனர்.

அண்மையிலே மீள் குடியேற்ற அமைச்சர் கேப்பாப்புலவிலிருந்து இராணுவம் வெளியேறுவதற்கு 50 இலட்சம் ரூபாவை வழங்கி அந்த மக்களுக்கு மீண்டும் சொந்த நிலங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படி நிலங்களை கொடுப்பதற்கான நடவடிக்கைளை உங்கள் அரசு செய்கின்றது. அதற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். இருந்தாலும் கடற்படையினரிடம் இருந்து அண்மையில் முள்ளிக்குளம் கிராமம் விடுவிக்கப்பட்டுள்ள போதும், அந்த மக்கள் முழுமையாக தங்களுடைய இடங்களிலே குடியேற முடியாத நிலையில் உள்ளனர்.

அதேபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறையில் உள்ளவர்கள், வேலையில்லாமல் துன்பப்படுகின்றவர்கள் என இப்படியெல்லாம் ஜனநாயக போராட்டத்தின் ஊடாக உங்களிடம் பலன் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் போராட்டங்களை மேற்கொள்ளுகின்றனர்.

அந்த வகையிலே போராட்டங்களை முன்னெடுக்கின்ற மக்கள் தங்களது போராட்டங்களை கை விட்டு சக வாழ்வில் பங்கெடுக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்.

எங்களுடைய பிரதேசத்தை அபிவிருத்தி ரீதியாக முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் அமைச்சர்களின் வருகையும், உங்களுடைய பார்வையும் மன்னார் மாவட்டம் உட்பட போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மீது இருக்க வேண்டும்.

அபிவிருத்தியிலே போரால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களும் உங்களுடைய அரசால் வளர்ச்சி பெற்றுள்ளது என்கிற செய்தி கிட்ட வேண்டும். அதற்கு நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியடையும் வகையிலே உங்களுடைய செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.

எந்த வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயமாக கடமையாற்ற வாய்ப்பு கொடுத்தால் தமக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தாங்களே மிகத்திறமையாக செய்கின்ற அதிகாரிகளும், அரச அதிபர்களும் வன்னி மாவட்ட அரச திணைக்களங்களில் இருக்கின்றார்கள்

அவர்களை தங்களின் சுய முயற்சியிலே செயல்படுவதற்கு நீங்கள் ஆணை வழங்க வேண்டும். அப்படி செய்கின்ற போது உங்களுடைய நல்லாட்சி என்பது நிச்சயமாக நல்ல ஆட்சியை எங்களுடைய மக்கள் மத்தியில் கொண்டு வர வாய்ப்பு ஏற்படும்.

மேலும், தற்போது கூட அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இருந்தாலும் இந்த அரசியல் தலையீடுகள் இல்லாமல் சுயமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில், நிச்சயமாக அவர்கள் கடமையாற்றுகின்ற மாவட்டங்களை முன்னுக்கு கொண்டு வர உங்களுடன் பயணிப்பார்கள் என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.