அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படும் வைரவிழா… பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு!!

திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் நடத்தப்படும் வைர விழா அரசியல் ஆதாயத்துக்கானது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி முதன் முறையாக 1957ஆம் ஆண்டு குளித்தலை சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 13 பொதுத்தேர்தலை சந்தித்த கருணாநிதி, 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை பொது தேர்தலில் திருவாரூர்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த கருணாநிதிக்கு 60வது வைரவிழா கொண்டாடப்பட உள்ளது.

அவரது பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். பீகார், புதுச்சேரி, ஒடிசா உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு திமுக ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், இந்த விழாவுக்கு அழைப்பது தொடர்பாக திமுக, பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு தங்களுடைய கட்சி உள்பட அனைத்துக் கட்சியினரையும் அழைக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இதற்குப் பதிலளித்த திமுகவின் ஆர்.எஸ். பாரதி, மதவாதக் கட்சிகளைத் தாங்கள் வைரவிழாவுக்கு அழைக்கப்போவதில்லை என கூறினார்.

இதற்கிடையே மருத்துவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமேஇ இந்த விழாவில் கருணாநிதி கலந்துகொள்வார் என்று ஸ்டாலின் நேற்று கூறினார். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்இ கருணாநிதி பங்கேற்காமல் நடத்தப்படும் வைர விழா அரசியல் ஆதாயத்துக்கானது. யாரெல்லாம் தமிழர்களுக்கு துரோகம் செய்தார்களோ அவர்களை எல்லாம் அழைத்து நடத்தப்படும் வைர விழா என்றார்.