பௌத்த நாடாக மாறும் வரை நல்லிணக்கம் சாத்தியம் இல்லை : மீண்டும் தலைதூக்கும் இனவாதம்

இலங்கை முற்றுமுழுதான பௌத்த நாடு என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இன்றைய தினம் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாடு முற்றிலும் பௌத்தத்திற்கு சொந்தமான நாடு என்பதனை அரசும், அமைச்சர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து விட்டு நல்லிணக்கம் என்பதனை எப்போதுமே ஏற்படுத்த முடியாது.

நாட்டில் இப்போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன பௌத்தம் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. வெளிப்படையில் நல்லிணக்கம் என்ற போர்வை போர்த்தப்பட்டு மறைமுகமாக பௌத்தம் மீது தாக்குதல் நடத்தப் பட்டுக் கொண்டு வரப்படுகின்றது.

அதேபோன்று முஸ்லிம்கள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளனர். ஒவ்வோர் பள்ளிவாசலும் பதுங்கு தளங்களே, அதற்குள் ஐ. எஸ். ஐ. எஸ் தீவிரவாதிகள் இருக்கின்றனர்.

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இலங்கையர் அனைவரும் வரலாற்றினைப் பற்றி கற்க வேண்டும். பௌத்தம் என்றால் என்ன? பிக்குமார்கள் யார் என்பது தொடர்பிலும் கற்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் மனோகணேசன் பதவிக்கு தகுதியற்றவர் எனவும் ஞானசார தேரர் வெளிப்படையாக குற்றம் சுமத்தினார்.

எனினும் அதற்கு பதிலளித்த அமைச்சர், தான் இந்தப்பதவிக்கு பொறுத்தமானவர் என அவர் நம்புவதாகவும், ஜனாதிபதி மற்றும் நாட்டு மக்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் மனோகணேசன் தெரிவித்தார்.