நேபாளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல்: எதிர்ப்புகளுக்கு நடுவே அமைதியாக வாக்குப் பதிவு

நேபாள நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மே 14-ம் தேதி (இன்று) தேர்தல் நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டது. ஆனால், இந்த தேர்தலுக்கு மாதேசி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மாகாண எல்லை தொடர்பான மறு வரையறை உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக புதிய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என அவர்கள் கூறி வந்தனர்.

அதேசமயம், மாதேசி முன்னணியின் கோரிக்கைகள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நிறைவேற்றப்படும். உள்ளாட்சித் தேர்தல், மே 14-ம் தேதி (இன்று) திட்டமிட்டபடி நடக்கும் என நேபாள பிரதமர் பிரசண்டா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேபாள உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. சுமார் 6,642 வாக்குச்சாவடிகளில் இந்த வாக்குப்பதிவானது தொடங்கி நடைபெற்று வந்தது. முதல்கட்ட வாக்குப் பதிவில் 4.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். மேயர், துணை மேயர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்காக சுமார் 50 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நேபாள தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் சூர்ய பிரசாத் கூறுகையில், மொத்தமுள்ள 34 மாவட்டங்களில் மதியம் வரை சுமார் 42 சதவீதம் வாக்குகள் பதிவானது என்றார்.

தற்போது நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. 1997-க்கும் அரசியல் சூழல் காரணமாக நேபாளத்தில் 20 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.