தாய்க்கு கட்டிய கோவிலை அன்னையர் தினத்தில் திறந்த லாரன்ஸ்: 1000 பெண்களுக்கு சேலை வழங்கினார்

அன்னையர் தினத்தில் நடிகர் லாரன்ஸ் தன் தாய்க்கு கோவில் கட்டி அதனை இன்று திறந்து வைத்தார். 1000 வயதான பெண்களுக்கு சேலையும் வழங்கினார். அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னையர் தினத்தில் தனது தாய் கண்மணி அம்மையாரை போற்றும் விதமாக அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில் ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் தனியாக கோவில் கட்டி சிலை நிறுவி உள்ளார்.

அன்னையர் தினமான இன்று, காலை 8.45 மணிக்கு கண்மணி அம்மையாரின் சிலையை ராகவா லாரன்ஸ் முன்னிலையில் சினிமா சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் திறந்து வைத்தார். இங்கு கண்மணி அம்மையார் சிலையுடன் காயத்திரி தேவி சிலை, சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளையும் திறந்து வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

வாழும் போதே தாய்க்கு ஒருவர் கோவில் கட்டி சிலை திறப்பது இதுவே முதல் முறையாகும். இங்கு அமைக்கப்பட்டு இருப்பது பளிங்கு சிலையாகும்.

தாயார் சிலை திறப்பையொட்டி வயதான 1000 பெண்களுக்கு சேலைகளை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார். மேலும் நகை அடகுவைத்து மீட்க முடியாமல் தவித்த 11 விவசாயிகளின் நகைகளை மீட்டு வழங்குவேன் என்று அறிவித்து இருந்தார். அதன்படி ஏற்கனவே 5 விவசாயிகளின் நகைகளை மீட்டு கொடுத்தார். இன்று மேலும் 6 விவசாயிகளின் நகைகளை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தார். அதை தாலியை மீட்டு தரும் நிகழ்ச்சியாக நடத்தினார்.

விழாவில்  ராகவா லாரன்ஸ் தாயார் கண்மணி, மனைவி லதா, மகள் ராகவி, சகோதரர்கள் எல்வின், முரளி, தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குனர் சாய் ரமணி மற்றும் ஏராளமான பொது மக்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரும் போது பொது மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த கோவில் திறந்து 48 நாள் முடிந்து மறுநாள் அவர்களை அழைக்க இருக்கிறார்.

அன்று  கலையுலகத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். எனது அன்னைக்கு அமைத்துள்ள இந்த ஆலயம் உலகில் உள்ள எல்லா அன்னையர்க்கும் சமர்ப்பணம் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.