வட கொரியா மீது வலுவான தடை கொண்டு வர உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு

வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையும் கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. புதிய அதிபராக மூன்ஜெ-இன் பதவி ஏற்றார். தகுந்த நேரம் வரும் போது வட கொரியா சென்று அதன் தலைவர் கிம் ஜாங்-யங்கை சந்திப்பேன் என்று அறிவித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை பொய்யாக்கும் விபத்தில் வட கொரியா இன்று காலை 5.27 மணிக்கு வட மேற்கு பியாங்யாங்கில் உள்ள குசாங் பகுதியில் மீண்டும் புதிய ஏவுகணை சோதனை நடத்தியது.

வடகொரியாவின் இந்த சோதனையை ஆத்திரமூட்டும் செயல் என விமர்சித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் ,” வட கொரியாவிற்கு எதிராக வலுவான பொருளாதார தடைகளை உலக நாடுகள் கொண்டுவர வேண்டும். தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வட கொரியாவின் செயலை உன்னிப்பாக கவனித்து வருகிறது. வட கொரியாவினால் அப்பகுதியில் நீண்ட கால அச்சுறுத்தல் நிலவி வருகின்றது.” எனத் தெரிவித்துள்ளார்.

வட கொரியா இன்று நடத்தியுள்ள சோதனையில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை, ஜப்பான் எல்லையை தாண்டி ரஷ்யா வரை சென்று தாக்கும் எனவும் சீன் ஸ்பைசர் கூறினார்.