வடகொரியா அணு ஆயுத சோதனைகளிலும், நவீன ஏவுகணைகள் சோதனைகளிலும் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இருப்பினும், “சரியான சூழல் அமைந்தால் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்துப் பேசுவேன்; அதை கவுரவமாக கருதுவேன்” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டி.வி. பேட்டி ஒன்றில் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், வடகொரியாவில் அமெரிக்க விவகாரங்களை கவனிக்கிற வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் பொறுப்பில் உள்ள சோ சன் ஹூய், சீனத்தலைநகர் பீஜிங்கில் நேற்று நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவரிடம், “டிரம்ப் நிர்வாகத்துடன் பேசுவதற்கு வடகொரியா முன்வருமா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “அதற்கான சரியான சூழல் அமையும்போது, அமெரிக்காவுடன் பேசுவோம்” என்று கூறினார்.
இதே போன்று தென்கொரியாவில் புதிதாக பதவி ஏற்றுள்ள அதிபர் மூன் ஜே இன்னுடன் பேசுவதற்கு வடகொரியா தயாரா?” என்றும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “பார்ப்போம்” என பதில் அளித்தார்.