சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிக்க வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே உள்ளார். அணியின் இயக்குனராக இருந்த ரவிசாஸ்திரிக்கு பதிலாக அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2014-2016 வரை ரவிசாஸ்திரி அணியின் இயக்குனராக பணியாற்றினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்இண்டீஸ் பயணத்தின் போது கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அவரது ஒரு ஆண்டு ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிகிறது. அதாவது சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது.

பயிற்சியாளர் பதவியில் கும்ப்ளே நீட்டிக்கப்படுகிறார். அவரது புதிய ஒப்பந்தம் குறித்து கிரிக்கெட் வாரியம், சாம்பியன் டிராபி போட்டிக்கு பிறகு விவாதிக்கிறது.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘சாம்பியன் டிராபியுடன் கும்ப்ளே ஒப்பந்தம் முடிகிறது. அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து கிரிக்கெட் வாரிய பொதுக்குழுவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு முடிவு செய்யப்படும் நிர்வாகக் குழு ஏற்கனவே இதற்கு ஒப்புதல் அளித்து விட்டது’’ என்றார்.

கும்ப்ளே பயிற்சியாளராக பொறுப்பேற்ற இந்த ஒரு ஆண்டில் இந்திய அணி 5 டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது.

வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்திய மண்ணில் நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), வங்காள தேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1) ஆகிய நாடுகளுக்கு எதிராக வென்றது.

17 டெஸ்சில் விளையாடி 12-ல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புனே டெஸ்டில் மட்டுமே தோற்றது. 4 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இந்தியாவில் நடந்த 2 ஒருநாள் தொடரையும் (நியூசிலாந்து 3-2), இங்கிலாந்து (2-1) கைப்பற்றியது.

இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பயிற்சியாளர் பதவியில் கும்ப்ளேக்கு சவாலானது.

இதேபோல பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கரும், பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதரனும் நீட்டிக்கப்படுகிறார்கள்.