நெல்லை:
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் இன்று நெல்லை சந்திப்பில் உள்ள அம்மா மருந்தகத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் மீனாட்சிபுரம் சன்னியாசி கிராமத்தில் உள்ள கூட்டுறவு ரேசன் கடையில் ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ ரேசன் கடையில் பொருட்கள் வாங்க வந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அம்மா மருந்தகத்திலேயே நம்பர் 1 மருந்தகமாக நெல்லை சந்திப்பு மருந்தகம் திகழ்ந்து வருகிறது. இங்கு தரமான மருந்துகள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக இதுபோன்று மேலும் அம்மா மருந்தகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேசன் கடைகளிலும் தரமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பருப்புகளில் அரிசி கலந்திருப்பது உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தால் எந்த ரேசன் கடைகளில் குறைபாடு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினால் அந்த ரேசன் கடையின் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2013-ம் ஆண்டிலேயே ரேசன் கடைகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதை நிறுத்தி விட்டது. ஆனாலும் தமிழக அரசு தொடர்ந்து ரேசன் கடைகளுக்கு மானியத்தை வழங்கி வருகிறது. உளுந்து, துவரம் பருப்பு என அரைகுறையாக வழங்க கூடாது என்பதற்காக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் துவரம் பருப்பு ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் உணவு பொருட்களுக்கு வழங்காத மானியத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இதுவரை மானியத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 1 கோடியே 40 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் ஓ.பி.எஸ். அணியில் கூடுதல் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சேர உள்ளார்கள் என செம்மலை கூறியுள்ளாரே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, செம்மலை அர்த்தமற்ற வகையில் பேசி வருகிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற நாங்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி நடத்தி வருகிறோம். ஜெயலலிதா கூறிய தேர்தல் வாக்குறுதிகள் 55-ல் 10 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள 45 வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை செயல்படுத்த கூடாது என்று ஓ.பி.எஸ். அணியினர் ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள். அது நடக்காது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு 5 ஆண்டுகளும் நீடிக்க கூடாது என நினைத்து இடையூறு ஏற்படுத்துபவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமைச்சருடன் கலெக்டர் கருணாகரன், விஜிலா சத்தியானந்த் எம்.பி., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, நெல்லை சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத் துரை, நிர்வாகிகள் தச்சை கணேச ராஜா, ஜெபராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.







