இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பில் பிரித்தானிய அரசு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் : நாடுகடந்த தமிழீழ அரசு

இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பில் பிரித்தானிய அரசு அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் பிரித்தானிய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய செயற்பாட்டாளர்களான மயூரன், வாகீசன் , ரமேஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களான Stephen Timms – New Ham , Siobhain Mc Donagh – Morden , James Berry – Kingston ஆகியோரை நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் மற்றும் யோகலிங்கம் தலைமையில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இதன் போது, இலங்கை அரசுக்கு பொறுப்பு கூறல் தொடர்பில் மேலதிகமாக இரண்டு வருட கால அவகாசம் ஐ.நா மன்றத்தில் வழங்கப்பட்டமை தொடர்பாக தமது ஆட்சேபனையை தெரிவித்ததுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் இனவழிப்பு தொடர்பான ஒரு ஆவணக்கையேடும் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த இரண்டு வருட காலத்தில் பொறுப்பு கூறல் தொடர்பாக இலங்கை அரசை கண்காணித்து பிரித்தானிய அரசினூடாக அழுத்தங்கள் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளால் விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஐயம் மேற்கொண்டிருந்த பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் James Berry அவர்களால் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது .

அத்துடன் லண்டனில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.