குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருக்கிறோம்… 108க்கு போன் போட்டு மிரட்டிய மர்ம நபர்!

பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் 108க்கு போன் போட்டு மிரட்டினர். இதனையடுத்து போலீசார் குஷ்புவின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். விசாரனைக்கு பின், மிரட்டல் தகவல் புரளி என தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு. அரசியல், சினிமா, சின்னத்திரை என பிரபலமாக இருக்கிறார் குஷ்பு. தற்போது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் குஷ்புவின் வீடு உள்ளது. அங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை ஆம்புலன்ஸ் அலுவலகத்துக்கு போன் செய்த அந்த நபர், நடிகை குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த மிரட்டல் போன்கால் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல்கொடுக்கப்பட்டது. குஷ்புவின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அங்கு சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்துள்ளது. அதனையடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

108க்கு போன் போட்டு ஆம்புலன்ஸ்தான் கூப்பிடுவார்கள். இப்படி அலற அடிச்சிட்டாங்களே என்று புலம்புகின்றனர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்.