தி.மு.க. முதன்மைச் செயலாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் அரசு இணைய தளத்தைப் பயன்படுத்தி தலைவர் கருணாநிதி மீது அவதூறு பரப்பியிருக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை குறிப்பாக நூற்றாண்டு விழாவை அவரால் உருவாக்கப்பட்ட இயக்கம் இரண்டாக பிளவு பட்டு ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டாடிக் கொள்ளட்டும். மறைந்த ஜெயலலிதாவின் மரணத்திற்கு எடப்பாடி அணி காரணமா, ஓ.பி.எஸ் அணி காரணமா என்று சண்டை போட்டுக் கொண்டு சந்து பொந்துகளில் எல்லாம் நின்று வசைபாடிக் கொள்ளட்டும்.
அவரது நூற்றாண்டில் அ.தி.மு.க.வை மத்தியில் உள்ள பா.ஜ.க.விற்கு ஒட்டுமொத்தமாக அடகு வைத்து விட்டு மண்டியிட்டு கிடக்கட்டும். அவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழா காணும் நேரத்தில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே சிக்கி வருமான வரித்துறை வலையிலிருந்து தப்பிக்க “மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்” என்று தன் சக அமைச்சர்களை கெஞ்சிக் கொள்ளட்டும். தலைமைச் செயலகத்திற்குள்ளேயே வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து ரெய்டு நடத்திக் கொள்ளட்டும்.
வருமான வரித்துறை ரெய்டுக்குள்ளான சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் விஜயபாஸ்கருக்கு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்து கொள்ளட்டும். ஆனால் தேவையில்லாமல் தலைவர் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை அரசு சார்பில் கொண்டாடும் முதல்- அமைச்சரின் அறிக்கையில் “நேர்மை, ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை ஆட்சியிலும் கருணாநிதி கடைப்பிடிக்க வேண்டும்” என்று எம்.ஜி.ஆர் வலியுறுத்தியதாக குறிப்பிட்டு, அதை அரசு இணையதளத்தில் ஹைலைட் பண்ணி காட்டியிருப்பது அரசியல் அநாகரீகமான செயல்.
ஒரு முதல்-அமைச்சராக இருக்கக் கூடியவர் அரசு இணையதளத்தை தனது சொந்த லாபத்திற்காகவும், சுயநல அரசியலுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளும் கேடு கெட்ட செயல்.
தனது ஊழலை மறைந்த எம்.ஜி.ஆரின் முகமூடியைப் போட்டு மறைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.
இந்திய தேர்தல் ஆணையமே தேர்தலை நிறுத்தும் அளவிற்கு ஊழல் பணத்தை தொகுதியில் பட்டியல் போட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முன்னின்று விநியோகம் செய்து தமிழகத்திற்கே அகில இந்திய அளவில் அவமானத்தைப் பெற்றுத் தந்தது உலகிற்கே தெரிந்த உண்மை. அப்படிப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர் கருணாநிதியின் நேர்மை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? கூவத்தூரில் கொண்டாட்டம் நிகழ்த்தி, சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதலமைச்சருக்கு “கடமை, கண்ணியம்” பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?
ஆகவே மறைந்த பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் வைரவிழா காணும் தலைவராக இருக்கும் கருணாநிதி பற்றி கருத்துக் கூறுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு துளி கூட அருகதை இல்லை என்பதை உணர வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.








