டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததால் தோல்வி: யுவராஜ்சிங் பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை தோற்கடித்தது. இதில் யுவராஜ்சிங்கின் (70 ரன், 41 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதத்தின் உதவியுடன் ஐதராபாத் நிர்ணயித்த 186 ரன்கள் இலக்கை டெல்லி அணி கேப்டன் கருண் நாயர் (39 ரன்), ரிஷாப் பான்ட் (34 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (33 ரன்), கோரி ஆண்டர்சன் (41 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

தோல்விக்கு பிறகு ஐதராபாத் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் கூறியதாவது:-


டெல்லி வீரர் ரிஷாப்பான்டின் ஷூவை சரி செய்கிறார், யுவராஜ்சிங்.

இந்த ஆட்டத்தில் ரன் குவிக்க வேண்டியது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஏனெனில் கடந்த 4 ஆட்டங்களில் களத்தில் நிலைத்து நின்று ஆடுவதற்கு எனக்கு போதுமான ஓவர்கள் கிடைக்கவில்லை. முதலில் பேட் செய்யும் போது, இறுதி கட்டத்தில் எதிரணி பவுலர்கள் பந்தை சரியாக பிடித்து வீசுவது (பனியின் தாக்கம் தொடங்கி விடும்) கொஞ்சம் கடினம் என்பதை அறிவோம். அதற்காக காத்திருந்து 16-வது ஓவருக்கு பிறகு அடித்து நொறுக்கினேன். 29 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை சஞ்சு சாம்சன் நழுவிட்டார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி.

முதல் 6 ஓவர்களில் நாங்கள் நிறைய ரன்களை (62-1) விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது. மேலும் கருண் நாயர் (21 ரன்னில்) கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் கோட்டை விட்டோம். தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். நாங்கள் புவனேஷ்வர்குமார், ரஷித்கான் ஆகியோரின் பந்து வீச்சைத்தான் அதிகமாக சார்ந்து இருக்கிறோம். நெஹரா முழு உடல்தகுதியை எட்டும் போது, எங்களது பந்து வீச்சு மேலும் வலுவடையும்.

இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.