பி.சி.சி.ஐ. எடுக்கும் முடிவு இந்திய கிரிக்கெட்டை பாதித்தால் சுப்ரீம் கோர்ட்டுக்கு போவோம்: நிர்வாகிகள் குழு எச்சரிக்கை

ஐ.சி.சி. கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையின்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய விதிமுறையை ஏற்க மறுத்துள்ள அதேவேளையில், அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாமல் உள்ளது. ஐ.சி.சி.யின் கெடு முடிந்துள்ள நிலையில், சாம்பியன்ஸ் போட்டியில் இருந்து இந்தியா வெளியேறுமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

இதுகுறித்து வருகிற 7-ந்தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. இதில் உறுப்பினர்கள் அனைவரும் இந்தியா சாம்பியன்ஸ் தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறினாலும், தங்கள் அனுமதியில்லாமல் பி.சி.சி.ஐ. அதிகாரிகளால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என நிர்வாகிகள் குழு கூறியிருந்தது.

இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறவே பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.

இந்நிலையில், நிர்வாகிகள் குழு சார்பில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘ஒட்டுமொத்தமாக இந்திய கிரிக்கெட் நலன்களை பாதுகாக்கும் எந்த முடிவையும் நிர்வாகிகள் குழு ஆதரிக்கும். இந்திய கிரிக்கெட் நலனுக்கு எதிராக எந்த முடிவையாவது பிசிசிஐ பொதுக்குழு எடுத்ததால், உச்ச நீதிமன்றம் செல்ல தயங்க மாட்டோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்த வரலாம். எனவே, இந்த சமயத்தில் பி.சி.சி.ஐ. கடுமையான நடவடிக்கையை எடுத்தால் அது பேச்சுவார்த்தையை முறித்துவிடலாம் என்றும் நிர்வாகிகள் குழு எச்சரித்துள்ளது.