உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன்: அதிபர் டிரம்ப்

கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளும், அணு ஆயுத சோதனைகளும் நடத்தி வருகிறது. அமெரிக்க பகுதியை குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை சமீபத்தில் நடத்தியது.

இருந்தும் எந்நேரமும் அணுகுண்டு சோதனை நடத்துவோம் என வட கொரியா எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரிய தீப கற்பகத்துக்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன. இதனால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது வட கொரிய அதிபர் கிம்ஜாங்-உன் மனநிலை சரியில்லாதவர் போன்று இருக்கிறார். பார்க்க அழகான இளம் பெண் போன்று காட்சியளிக்கிறார் என்று கிண்டலடித்தார்.

மேலும் கிம்ஜாங்-உன் மிக இளம் வயதில் பதவிக்கு வந்தவர் என்றும், ஆட்சிக்கு வந்த 2 ஆண்டில் சித்தப்பாவை கொன்றார். தற்போது தனது அண்ணனை கொல்ல உத்தரவிட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே, வட கொரிய அதிபர் கிம்ஜாங்- உன்னை சந்திக்க தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதற்கு உகந்த நல்ல சூழ்நிலை அமைய வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார்.

ஆனால் தற்போது இதற்குரிய சூழ்நிலை இல்லை என அவர் கருதுகிறார். இத்தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி துறை மந்திரி சீன் ஸ்பைகர் தெரிவித்துள்ளார்.

வட கொரியா தனது அணு ஆயுத சோதனையை முற்றிலும் கைவிட வேண்டும். மிரட்டல் விடும் சூழ்நிலை மாற வேண்டும். அப்போதுதான் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசும் சூழ்நிலை உருவாகும் தற்போது அந்த நிலை ஏற்படவில்லை என ஸ்பைகர் விளக்கம் அளித்தார்.