தமிழக அரசை பா.ஜனதா முடக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

பா.ஜனதா சார்பில் சூளை அங்காளம்மன் கோவில் தெருவில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதை மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு ஜூஸ், மோர் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று 90 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். வருகிற 10, 11-ந்தேதிகளில் அமித்ஷா தமிழகம் வருகிறார். தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கிறார்.

தமிழக அரசை பா.ஜனதா முடக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. அது தவறானது. தமிழக அரசு ஏற்கனவே முடங்கி போய்தான் இருக்கிறது. தமிழக அரசை முடக்க வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு கிடையாது.

தமிழகத்தில் சிறந்த எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படவில்லை. விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் 41 நாள் போராட்டம் நடத்தினார். சென்னை திரும்பிய அவர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி உள்ளார்.

மக்கள் பிரச்சினைக்காக போராடியவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது என்ன நியாயம். விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க அவர் முதல்வரை நான் சந்தித்து இருக்க வேண்டும்.

இதிலிருந்து விவசாயிகள் போராட்டத்துக்கு பின்னால் தி.மு.க. இருக்கிறது என்பது நிருபணமாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் செல்வம், மாவட்ட தலைவர் தனஞ்செயன், ஜெய்சங்கர், தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.