யாழ். கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் மரண தண்டனை கைதிக்கு தெரிந்த உண்மைகள்? பேரம் பேசிய சந்தேகநபர்கள்

யாழ்.ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப்பெண் ஹம்சிகாவின் படுகொலை தொடர்பில், பாலியல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு தகவல்கள் தெரியுமா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கர்ப்பிணிப்பெண் ஹம்சிகா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் நேற்று (28) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் குறித்த படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணைகளின் போது,

“இந்த வழக்கு விசாரணையின் போது எம்மை காட்டிக் கொடுக்காமல் இருந்தால் கண்கண்ட சாட்சியமான மாற்றுத்திறனாளி சிறுவனின் குடும்பத்துக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தருவதாக தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சிறுவனின் உறவினரான மகிந்தன் என்பவருடன் இது பற்றி பேசியுள்ளனர்” என குறித்த சிறுவனின் தாயார் தெரிவித்திருந்தார்.

ஆனால், “சந்தேகநபர்கள் இருவரும் தன்னுடன் பேரம் பேசவில்லை எனவும், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெகன் என்பவரே குறித்த படுகொலை தொடர்பில் தனக்குத் சில உண்மைகள் தெரியும் எனவும், அதனைத் தான் நீதிமன்றில் கூறுவதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தருமாறும் சந்தேகநபர்களிடம் பேரம் பேசியதாக தெரிவித்துள்ளார்” என்று பொலிஸார் நேற்று (28) நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதில் ஜெகன் என்பவர் நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, யாழ். மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி எனவும் தெரிவித்திருந்துள்ளனர்.

தொடர்ந்து, ஜெகன் எனும் நபரை எதிர்வரும் 12ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு பதில் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா உத்தரவிட்டதுடன், வழக்கினையும் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது, குறித்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரொருவர், தனக்கு ஊர்காவற்துறை கர்ப்பிணி படுகொலை தொடர்பில் சில தகவல்கள் தெரியும் எனவும், அதனை தான் ஊர்காவற்துறை நீதிமன்றில் தெரிவிக்க தயார் எனவும் மன்றில் தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து அது தொடர்பில் குறித்த நபரை ஊர்காவற்துறை நீதிமன்றில் சாட்சியமளிக்க ஏற்பாடு செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி, ஊர்காவற்துறையில் ஏழு மாதக் கர்ப்பிணியான ஹம்சிகா (வயது 27) எனும் பெண் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் சகோதரர்களான இரு நபர்கள், மண்டைதீவு சந்தியில் வைத்து அன்றைய தினம் மாலை, ஊர்காவற்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில் கண்கண்ட சாட்சியமாக மாற்றுத்திறனாளி சிறுவன் குறித்த இரு சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டியமை குறிப்பிடத்தக்கது.