எடப்பாடி அரசு பா.ஜனதாவின் பினாமி ஆட்சிதான்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நிதி அயோக்” கூட்டத்தில் தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் பற்றி பேசியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தவறான தகவலை தமிழக மக்களுக்கும், எனக்கும் பதிலறிக்கை என்ற பெயரில் கொடுத்திருக்கிறார்.

முதலமைச்சரின் பதிலறிக்கையைப் பார்த்தால் அது அவர் எழுதியதா அல்லது பா.ஜ.க.வினர் யாராவது எழுதிய அறிக்கையை முதலமைச்சர் படித்துப் பார்க்காமலேயே வெளியிடுகிறாரா என்ற சந்தேகமே வருமளவிற்கு அந்த அறிக்கையில் பிரதமரை மனமுவந்து பாராட்டியிருக்கிறார்.

அ.தி.மு.க.வில் நடக்கும் “இணைப்புப் போட்டியில்”, தான் யாருடைய ஆதரவாளராக இருக்கிறேன் என்பதை முதலமைச்சர் பதவிக்குப் போட்டி போடுவோருக்கு தெரிவிக்க இந்த பதிலறிக்கை பயன்படுமே தவிர, எனது குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் அறிக்கையாக எனக்குத் தோன்றவில்லை.

அ.தி.மு.க. போல் “பகட்டு அறிவிப்புகளை” செய்வதில் தி.மு.க.விற்கு என்றைக்கும் உடன்பாடு இருந்ததில்லை. “கற்பனை திட்டம்” “கனவுத் திட்டம்” எல்லாம் அதிமுக ஆட்சியில் 110 அறிவிப்பாகவும், தொலை நோக்குத் திட்டம் 2023 ஆகவும், தேர்தல் வாக்குறுதிகளாகவும் தான் எப்போதும் நிரந்தரமாக இருக்கும். ஆனால் திமுகவைப் பொறுத்தமட்டில் “சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்” என்று சிறப்பாக ஆட்சி நடத்தி தமிழகத்தை பொருளாதார ரீதியாக, தொழில் வளர்ச்சி ரீதியாக, உட்கட்டமைப்பு ரீதியாக முன்னேற்றிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு அதிலும் குறிப்பாக தலைவர் கலைஞருக்கு உண்டு என்பதை எடப்பாடி பழனிச்சாமிக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

விவசாயிகள் டெல்லியில் போராடினார்கள். தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் முழு அடைப்பு நடத்துகின்றன. இதுபோன்ற வேளையில் டெல்லியில் நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர், விவசாயிகள் கடன் தள்ளுபடி பற்றி பேசி, அனைத்து மாநில முதலமைச்சர்களின் கருத்தையும் திரட்டியிருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதை சுட்டிக்காட்டினால், பிரதமர் தமிழ் பற்றி பெருமையாக பேசினார் என்று பதிலறிக்கை விடுகிறார்.

ஒரு வாதத்திற்கு தமிழ் பற்றி பிரதமர் “நிதி அயோக்” கூட்டத்தில் பெருமையாக பேசினார் என்றால், உடனே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்குங்கள் என்று ஏன் அந்தக் கூட்டத்திலேயே முதல்வர் வேண்டுகோள் விடுக்கவில்லை? பிரதமரே உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பை முதலமைச்சர் கோட்டை விட்டது ஏன்? ஆகவே நான் திரும்பவும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

தமிழகம் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி வலுவான கருத்தை “நிதி அயோக்” கூட்டத்தில் எடுத்து வைத்து, பிரதமரிடம் நிவாரணம் கோரத் தவறி விட்டார் முதலமைச்சர் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

தமிழக மக்கள் என்ன கஷ்டம் பட்டால் என்ன? விவசாயிகள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டால் என்ன? நான் மத்திய அரசு கோபித்துக் கொள்ளும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன் என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக இருக்கிறார் என்பது தான், இப்போது எனக்கு அவர் வெளியிட்டுள்ள “பதிலறிக்கையிலும்” தெரிய வந்துள்ளது.

அதனால் தான் நான் திரும்பத் திரும்ப “மோடியின் பினாமி அரசு” என்று அதிமுக அரசை கூறி வருகிறேன். அதை இல்லை என்று மறுக்கும் நடவடிக்கைகள் எதையும் இதுவரை முதலமைச்சர் எடுக்கவில்லை நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதும் வெளிப்படுத்தவில்லை என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.