பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதா? அல்லது பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்துவதா? என தீர்மானிக்கப்பட்டதன் பின்னரே காணி விடுவிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் படையினர்வசம் உள்ள காணிகளை மக்களிடம் கையளிப்பது குறித்து யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை படையினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலமையில் சந்தித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் படையினர்வசம் உள்ள 4ஆயிரம் ஏக்கர் காணி தொடர்பாக பேசப்படுகையில் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதா? அல்லது பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்துவதா? என தீர்மானிக்கப்பட்டதன் பின்னரே காணி விடுவிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம் என படையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே படையினர்வசம் உள்ள காணிகள் தொடர்பாக அந்தந்த பிரதேச செயலர்கள் ஊடாக தகவல் சேகரிக்கப்படுவதுடன், அந்த பகுதியில் உள்ள அரச காணிகள் தொடர்பாகவும் அந்தந்த பிரதேச செயலர்கள் அறிக்கை ஒன்றை வழங்க வேண்டும்.
அதன் பின்னர் அந்த அறிக்கை மாவட்ட செயலருக்கு வழங்கப்பட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது வழங்கப்படும். பின்னர் அது குறித்து ஐனாதிபதியுடன் பேசப்படவுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஆக்கபூர்வமான தீர்மானம் எவையும் எடுக்கப்படவில்லை.
இதேவேளை ஐனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே இந்த காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் நடப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
வடகிழக்கு மாகாணங்களில் படையினர்வசம் உள்ள மக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வு காண்பது தொடர்பாக அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படை தளபதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது இந்நிலையிலேயே இன்றைய தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







