சித்திரை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்!

சித்திரை மாதத்தில் வரும் சுக்லபட்ச வெள்ளிக் கிழமைகளில் அன்னை பார்வதி தேவியை துதித்து கடைப்பிடிக்கப்படுவது இந்த விரதம். இந்த விரதம் மேற்கொள்பவர்கள் அம்பாளுக்கு பூஜை செய்து, சர்க்கரையை நைவேத்தியம் செய்து வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.

சித்திரைமாதம் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவருக்கு பூஜை செய்ய வேண்டும். பைரவருக்கு தயிர்சாதம் படைத்து விரதம் இருந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். நமக்கு தீங்கு செய்த எதிரிகள் பாதிக்கப்படுவர். வாழ்வில் வளம் சேர்க்க இந்த விரதம் ஏற்றது. இதனை பரணி விரதம் என்பர்.

சித்திரை சுக்லபட்சத்தின் திரிதியை திதியில் உமாமகேஸ்வரரை துதித்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அன்று தான, தருமங்கள் செய்வதால் இப்பிறவியில் வளமான வாழ்வும் மறுபிறவியில் கயிலாச லோக பிராப்தியும் கிடைக்கும். இதை சவுபாக்கிய சயனவிரதம் என்பர்.

சித்ராபவுர்ணமியன்று கடைப்பிடிக்கப்படும் சித்ரகுப்த விரதம் ஆயுளை அதிகரிக்க செய்யும். இந்த விரதம் இருப்போருக்கு புண்ணியங்கள் சேரும்.